விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை குறிஞ்சிப்பை பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சின்னதுரை என்பவர் கட்டி வந்தார்.
நேற்று 30க்கும் மேற்பட்டோர் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று சனிக்கிழமை என்பதால் வாரச் சம்பளம் பெறுவதற்காக கட்டிட முன் பகுதியில் மாலை 5.45 மணி அளவில் அனைவரும் கூடியிருந்தனர்.
அப்போது, கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரம் சரிந்தது. அதைத் தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் செஞ்சியை அடுத்த திருக்கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து செஞ்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.