சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணையின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் தமீம் அன்சாரியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
"தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்ததில்...."
சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் 7.1.2014 அன்று குற்றம் சம்பந்தமாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் தமீம் அன்சாரியிடம், அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டிருந்த போது தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்ததில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
தொடர் சிகிச்சை:
இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமீம் அன்சாரிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த சிகிச்சைக்கான முழு மருத்துவ செலவினையும் அரசு ஏற்றுக்கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் நிதி:
தமீம் அன்சாரி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமீம் அன்சாரியின் வறுமையான குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்திரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.