நாட்டுக்காக தான் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று தன் தந்தை விரும்பியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் Ace Against Odds என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான் கூறியதாவது:
என் தந்தை நான் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று விரும்பினார். அது மிக எளிதாக நடந்திருக்கும், ஆனால் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து கிரிக்கெட் பயிற்சி செல்வதென்பது எனக்கு ஒத்துவராது என்பதை புரிந்து கொண்டேன். அது என்னால் முடியாத காரியம். கிரிக்கெட் மிகவும் கடினமாகவே இருந்திருக்கும்.
எனது பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் சலீம் துரானி நியமிக்கப்பட்டார். முதல் நாள் நான் விளையாடுவதை அவர் பார்த்தார். நான் உண்மையில் நன்றாகவே ஆடினேன். 2-வது நாளும் நான் நன்றாக ஆடினேன். 3-ம் நாள் சலீம் துரானி என் தந்தையை அழைத்து எனக்கு கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாகக் கூறினார். என் தந்தை என் ஆட்டத்தைப் பார்க்க வரும்போது நான் வேண்டுமென்றே மோசமாக ஆடினேன்.
பள்ளிக்குச் செல்லும் போது கூட காலையில் எழுந்து தயாராவது எனக்கு பெரும்பாடாக இருந்த நிலையில் கிரிக்கெட் பயிற்சி என்பது சாத்தியமில்லாத ஒன்றாயிற்று. காலையில் 8.30 மணிக்கு எழுந்திருக்கும் நான் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்வதே சிரமமாக இருந்தது. நான் உண்மையில் இயக்குநராகவே விரும்பினேன்.
என்னுடைய குடும்பம் இன்றி நான் சல்மான் கானாக இன்று அறியப்பட்டிருக்க முடியாது. குடும்பத்தினர் குழந்தைகளை ஆதரிக்க வேண்டும். குழந்தைகளை ஆதரிக்காத, அவர்கள் விருப்பத்துக்கு இணங்காத பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோர் தவறு என்பதை நிரூபிக்க விழைந்து வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறேன்.
இவ்வாறு கூறினார் சல்மான் கான்.