திருச்சி பிராட்டியூர் அண்ணா நகரில் வருகிற பிப்ரவரி 15,16-ம் தேதிகளில் தி.மு.க. 10–வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 200 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பந்தல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டிற்கு விளம்பரம் செய்வதற்காக திருச்சி மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கில் பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராப்பட்டி, பொன்னகர், கருமண்டபம் மற்றும் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் தி.மு.க.வினரால் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பர போர்டுகள் மற்றும் பேனர்களை காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் அகற்றி அவற்றை அந்தந்த இடத்திலேயே மக்கள் பார்வையில் வாசகங்கள் படாதவாறு திருப்பி அடுக்கிவைத்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி…
இதனையறிந்த தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு திரண்டு விளம்பரப் பதாகைகளை அகற்றிய காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. “அனுமதி பெறாமல் அமைக்கப்படும் பேனர்களை அகற்றச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவைத்தான் நாங்கள் நிறைவேற்றுகிறோம். சட்டத்திற்குப் புறம்பாக வேறெதுவும் நாங்கள் செய்யவில்லை” என காவல்துறையினர் தி.மு.கவினருக்கு பதிலளித்தனர்.
“அப்படியானால் அ.தி.மு.க.வினர் அனுமதி பெறாமல் பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் அக்கட்சி பொதுச்செயலரை வாழ்த்தி வைத்துள்ள பதாகைகளை ஏன் அகற்றவில்லை?” என திமுகவினர் கேட்டதற்கு பதிலளிக்காமல் நகர்ந்து சென்றனர் காவல்துறையினர். பிறகு எதற்கு வம்பு என நினைத்தார்களோ என்னவோ சில மணி நேரத்தில் தி.மு.க.வினரை அழைத்து பேனர்களை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கினர்.
ஆர்வத்தில் கட்சியினர்…
இதுகுறித்து தி.மு.க மாநகரச் செயலாளரான அன்பழகன் கூறுகையில், “எந்த விதத்திலும் விதிமீறலில் ஈடுபடக்கூடாது என கட்சித் தலைமை எங்களுக்கு கடுமையாக உத்தரவிட்டுள்ளது. அதனால் நாங்கள் அனுமதி பெறாமல் எங்கேயும் பேனர் அமைக்கவில்லை. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 6 நாட்களுக்கு முன்புதான் பேனர் வைக்க அனுமதிப்போம் என மாநகராட்சி கூறுகிறது. நாங்கள் 15 நாட்களுக்கு முன்பு பேனர் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ளோம். கட்சி விசுவாசிகள் சிலர் ஆர்வத்தில் சில இடங்களில் அனுமதி பெறாமல் பேனர் வைத்துள்ளனர். அவர்களையும் அனுமதி பெறாமல் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். அதேசமயம் அனுமதி பெறாமல் அ.தி.மு.கவினர் வைத்துள்ள பேனர்களை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது காவல்துறை” என்றார்.
அனுமதி பெறவில்லை…
மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்(திட்டம்) சிவபாலன் கூறுகையில், “திருச்சியில் அ.தி.மு.க.வினரோ, தி.மு.க.வினரோ பேனர் வைக்க அனுமதி பெறவில்லை. அவர்கள் விண்ணப்பம் மட்டுமே செய்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை நாங்கள் மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுப்பி அவர்களின் ஒப்புதல் வாங்கிய பிறகே அனுமதி வழங்குவது வழக்கம். நிகழ்ச்சி நடப்பதற்கு 6 நாட்கள் முன்புதான் விளம்பரப் பதாகை வைக்க வேண்டும். அரசியல் கட்சியினர் அனுமதி பெறாமல் வைக்கும் பேனர்கள் மீது காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் கணேசன் கூறியது: “தி.மு.க.வினர் ஒரு சில இடத்தில் பேனர் வைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ள சான்றுகளை எங்களிடம் வந்து காட்டினர். அந்த இடங்களில் மட்டும் பேனர்கள் வைக்க பிறகு அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க.வினர் அனுமதி வாங்கித்தான் பேனர் அமைத்துள்ளனர்” என்றார்.