தமிழகம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

செய்திப்பிரிவு

நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க அமைப்பு செயலாளர் பால் கண்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டிரைவர்கள் (பைலட்), உதவியாளர்கள், கால் சென்டர் ஊழியர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை இரவு 8 மணி முதல் வியாழக்கிழமை இரவு 8 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க் கிழமை நிர்வாகத்துடன் தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனை தொடர்ந்து புதன்கிழமை பகல் 11 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. தொழிலாளர் துணை ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜன், அமைப்பு செயலாளர் பால் கண்ணன், சிவக்குமார், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மாலை 5 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலை நிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் அமைப்பு செயலாளர் பால் கண்ணன் கூறியதாவது:

தொழிலாளர்களை பணியிடம் மாற்றம் செய்வதில் சரியான கொள்கையை வகுத்தல், பழிவாங்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்குதல் உட்பட 4 கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.

மற்றக் கோரிக்கைகளை பேசு தீர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை பிப்ரவரி 10-ம் தேதி நடக்கிறது. அதனால், மக்கள் நலனை கருத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT