தமிழகம்

100-வது பிறந்த நாள் விழா: ராமாவரம் தோட்டத்தில் கொடியேற்றி எம்.ஜி.ஆர். சிலையை திறந்தார் சசிகலா

செய்திப்பிரிவு

எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளையொட்டி அவரது ராமாவரம் தோட்டத்துக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அதிமுக கொடியேற்றி, எம்.ஜி.ஆர். முழு உருவச் சிலையை திறந்துவைத்தார்.

எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளையொட்டி அவரது ராமா வரம் தோட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கலந்துகொள் வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராமாவரம் தோட் டத்துக்கு செல்லும் வழியெங்கும் இருபுறமும் அதிமுக கொடி, தோரணம் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே சசிகலாவை வர வேற்கும் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. செண்டை மேளம் முழங்க, இசைக் கச்சேரியுடன் கட்சியினர் சசிகலாவுக்கு உற் சாக வரவேற்பு கொடுத்தனர். வழிநெடுகிலும் ஏராளமான போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ராமா வரம் தோட்டத்துக்கு வந்தார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா பூங்கொத்து கொடுத்து சசி கலாவை வரவேற்றார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் சசிகலாவை வரவேற்றனர்.

அதையடுத்து ராமாவரம் தோட் டத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடியை சசிகலா ஏற்றி வைத் தார். பின்னர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். முழு உருவச் சிலையை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகளும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் ஆகியோரது நினைவு மண்டபங்களுக்குச் சென்ற சசிகலா, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், ராமாவரம் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் மேல் நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மாற்றுத் திறனாளிகளின் நிலையான முன் னேற்றத்தில் பொருளியல் பார்வை’ என்ற கருத்தரங்கை சசிகலா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பள்ளித் தாளாளர் லதா ராஜேந்திரன் வரவேற்றார். டாக்டர் மோகன் காமேஸ்வரன் சிறப்புரை யாற்றினார்.

பள்ளியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் ரூ.10 லட்சத் துக்கான காசோலையை லதா ராஜேந்திரனிடம் சசிகலா வழங் கினார். மேலும், காது கேளாத மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி, அறக்கட்டளை சார்பில் 165 மாணவர்களுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான 256 காதொலிக் கருவிகளை வழங்கினார். நிறை வில், பள்ளி முதல்வர் இந்திரா நன்றி கூறினார்.

அதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவர்க ளுக்கு உணவு பரிமாறி, அவர்களு டன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது இரு மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர், கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT