தமிழகம்

முல்லை பெரியாறு, ஜல்லிக்கட்டில் திமுக துரோகம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணை, ஜல்லிக்கட்டு விளையாட்டு விவகாரங்களில் திமுக துரோகம் விளைவித்தது என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

மதுரையில் அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டம் பாண்டிகோவில் அருகே நேற்று நடைபெற்றது. இதில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 47 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பேசியதாவது: முல்லை பெரியாறு அணையின் முழு நீர்தேக்க அளவு 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் செயல்படுவது அதிமுக மட்டுமே.

முல்லை பெரியாறு வழக்கில் கேரள அரசு சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2006-ல் மனு தாக்கல் செய்தோம். அதன் பிறகு பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அந்த தேர்தலில் இப்போது போலவே திமுக, காங்கிரஸ் கூட் டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் பிரச்சாரத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. வெற்றிபெற்ற பிறகு வாக்குறுதியை கருணாநிதி மறந்து விட்டார். தன்னலம் என்றால் தமி ழகத்தை அடகு வைப்பார். பொது நலன் என்றால் பொறுமை காப்பார் கருணாநிதி.

அதிமுக ஆட்சியில் 35 ஆண்டுக் குப் பிறகு 2014-ல் முல்லை பெரி யாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. புதிய அணை கட்ட கேரள அரசுக்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வைத்தோம். முல்லை பெரி யாறு அணையை பலப்படுத்தும் பணி முடிந்ததும் 152 அடிக்கு நீர் தேக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப் பதற்கு திமுக, காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் அரசில் 11.7.2011-ல் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன. இந்த அறிவிக்கையால்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. தற்போதைய மத்திய அரசு 7.1.2016-ல் பிறப்பித்த அறிவிக்கை ஜல்லிக்கட்டுக்கு வழி செய்தாலும் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியில் தொடர்ந்து உள்ளன. இதனால் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்கச் செய்து ஜல்லிக்கட்டு நடத்துவோம் என உறுதி அளிக்கிறேன்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் கொள்ளையில் கருணாநிதியின் குடும்பத்தினருக் கும் தொடர்பு உள்ளது. கருணா நிதியின் பேரன் பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் குவாரி உட்பட 3 குவாரிகளை ஆய்வு செய்து ரூ.16 ஆயிரம் கோடி கிரானைட் கொள்ளை நடந்துள்ளதாக ஆட்சி யர் அறிக்கை அளித்தார். இதனா லேயே திமுக நடவடிக்கை எடுக்க வில்லை. அதிமுக ஆட்சியில் கிரானைட் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்போது ரூ.1.10 லட்சம் கோடிக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்றதாக திமுக கூறி வருகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் 2012-ல் கிரானைட் வெட்ட தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் மொத்த கொள்ளையும் திமுக ஆட்சியில் நடைபெற்றதுதான்.

அதிமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்து தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. காவல் நிலை யங்களில் அரசியல் தலையீடு இல்லை. தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் அபகரிக்கப்பட வில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT