தமிழகம்

வேலூர்: ஆந்திராவுக்கு மாதந்தோறும் 6 டன் அரிசி கடத்தல்

செய்திப்பிரிவு

கதவாளம் கூட்டுறவு சங்கத்தின்கீழ் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மாதம் 6 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் பகீர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த கூட்டுறவுச் சங்கத்தில் 100 சதவீதம் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. ஆட்சியர் ஆர்.நந்தகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பலராமன், வேளாண் இணை இயக்குனர் ஜெயசுந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெங்கடேசன், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் தினகர் குமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் குறித்து பேசினர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் விவாதம்:

வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்றார் ஒரு விவசாயி. வேலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக சுமார் 20 ஹெக்டரில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மட்டும் தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்று பதில் அளித்தார் அதிகாரி.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 17 ஒன்றியங்களில் மட்டும் அரசின் மானிய திட்டங்கள் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர் தொடர்பான மத்திய அரசின் உத்தரவை காரணம் காட்டி 17 ஒன்றியங்களில் அரசின் மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், இலவச மின் இணைப்பு பெறவும் முடியவில்லை என்றார். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தனபால். இதற்கு பதில் அளித்த ஆட்சியர், ‘‘மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் இருபக்கம் மலைகள், பேரணாம்பட்டில் இருபக்கமும் மலைகள், ஆசனாம்பட்டின் இருபக்கமும் மலைகள் இருக்கிறது. மழை பெய்தால், அந்த நீர் ஆற்றுக்கு வராமல் எங்கே செல்கிறது. ஏன் வெள்ளம் வருவதில்லை என்றார் விவசாயிகள் சங்கத்தின் தனபால். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதைப் பார்த்து கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கை தட்டியதும், அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டு, ‘இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்’ என்றனர்.

பேரணாம்பட்டு கதவாளம் கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் போலி ரேஷன் அட்டைகள் உள்ளது. அரிசி வாங்கச்சென்றால் குடும்ப தலைவர்கள் கையெழுத்திடவேண்டும் என்ற நடைமுறை உள்ளது. குடும்பத் தலைவர் பிழைப்பிற்காக வெளியூர் சென்ற நிலையில், 10 கிலோ ரேஷன் அரிசியை கடை ஊழியர்களே குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத்துகின்றனர். மாதத்துக்கு 6 டன் வரை ரேஷன் அரிசி தாராளமாக கடத்தப்படுகிறது. எனவே, கையெழுத்து போட்டால்தான் அரிசி வழங்கப்படும் என்ற முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார் அரங்கல்துருகம் மாஜி ஊராட்சி தலைவர் நாமதேவன்.

‘‘கதவாளம் பகுதியில் 100 சதவீதம் ரேஷன் அட்டைகள் தணிக்கை செய்ய குழு அமைக்கப்படும். நவம்பர் மாதம் வரை 1,500 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 13 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெங்கடேசன். இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

SCROLL FOR NEXT