தமிழகம்

காவிரியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு

செய்திப்பிரிவு

காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைக் கண்டித்து தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப் பண்ணை எதிரில் உள்ள காவிரியாற்று பகுதி வரை தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். பின்னர் வறண்ட காவிரியாற்றில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ‘‘தரும புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைக் காக செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமே முடங்கும் வகையில் காவிரியாற்றில் கர்நாடக அரசு நீர்வரத்தை முடக்கி உள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் எதையும் கர்நாடக அரசு ஏற்காமல் மறுத்து வருகிறது. இதை தமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரியில் மேகேதாட்டு பகுதி யில் புதிய அணை கட்ட ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசின் செயல் கண்டனத்துக்கு உரியது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறினால், புதிதாக கட்டப்படும் அணையை தமிழக விவசாயிகள் திரண்டு சென்று உடைக்கும் செயலில் இறங்குவோம். 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் நிலையில் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்று பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், பொருளாளர் வேலுமணி, நிர்வாகிகள் பாண்டியன், மணி மொழியன், ஆறுமுகம், சின்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒகேனக்கல்லில் அதிக அளவில் விவசாயிகள் திடீரென ஒன்றுதிரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் நடைபெறும் தொடர் போராட்டத்தைப் போன்று இங்கும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்ற அச்சம் உருவானதால் அங்கு பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT