தமிழகம்

காதலர்களும் மாணவர்களும் நுழைய தடை: சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி பூங்கா

ஹரிஹரன்

சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள மேயர் சுந்தர் ராவ் பூங்காவில் ‘மாணவ, மாணவிகள் மற்றும் காதலர்களுக்கு அனுமதி இல்லை’ என்று சென்னை காவல்துறை லோகோவுடன் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி பராமரிக்கும் இந்த பூங்கா காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பூங்காவில் பல்வேறு இடங்களில் ‘மாணவ, மாணவிகள் மற்றும் காதலர்களுக்கு அனுமதி இல்லை’ என்று காவல்துறை லோகோவுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த நோட்டீஸ் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு எதிராக விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

காதலர்கள் என்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது நடைப்பயிற்சிக்கு வருபவர்களுக்கு தொந்தரவாக இருப்பதால் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதனால் காதலர்கள் ஒருவித பயத்தோடு பூங்காவுக்கு வருகின்றனர். தனது காதலியுடன் பூங்காவுக்கு வந்திருந்த வடபழனியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் இதுபற்றி கூறும்போது, “நாங்கள் ஒன்றரை வருடமாக காதலித்து வருகிறோம். மாதத்தில் 2 அல்லது 3 முறை இந்த பூங்காவுக்கு வருவோம். பூங்கா என்பது பொது இடம். இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளது முற்றிலும் தவறான செயல். சிலர் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதற்காக ஒட்டுமொத்தமாக காதலர்களுக்கு அனுமதி மறுப் பதை ஏற்க முடியாது’’ என்றார்.

புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர் கூறும்போது, “இந்த அறிவிப்பு நூறு சதவீதம் சரியானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிப்பதற் காகத்தான் கல்லூரிக்கு அனுப்பு கிறார்கள். படிப்பதை விட்டு விட்டு பூங்காவில் வந்து அரட்டை அடிப்பதும் காதல் செய்வதும் பெண்களின் வாழ்க்கையை கெடுத்துவிடும். காதல் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு’’ என்றார்.

எத்திராஜ் கல்லூரி மாணவி ஒருவர் கூறும்போது, “மாணவிகள் தேர்வு நேரத்தில் படிப்பதற்கும் பொழுதுபோக்குவதற்கும் இங்கு வருவார்கள். நாங்கள் எங்கள் பிறந்த நாளை கல்லூரி தோழிகளுடன் இந்த பூங்காவில் கொண்டாடுவோம். பூங்கா என்பது பொது இடம். இங்கு மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்பது நியாயமற்றது” என்றார்.

புதுப்பேட்டையை சேர்ந்த விஜயராணி கூறும்போது, “அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் வேலைபார்ப்போர் பலர் இங்கு நடைபயிற்சிக்காக வருகின்றனர். காதலர்கள் என கூறிக் கொள்வோர் பொது இடம் என்று கூட கருதாமல் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர். காதலர்களுக்கு தடைவிதிப்பது சரியான நடவடிக்கை” என்றார்.

மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, “மாநகராட்சி தரப்பில் எத்தகைய நோட்டீசும் ஒட்டவில்லை. இருப் பினும் சர்ச்சைக்குரிய நோட்டீஸ் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதாவிடம் கேட்டபோது, ‘‘பூங்கா என்பது பொது இடம். பொது இடத்தில் யாருக்கும் தடை விதிக்க முடியாது. மேலும், காவல்துறை அனுமதி பெறாமல் காவல்துறையின் லோகோவை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இதை செய்தவர்கள் யாரென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.

திருவல்லிகேணி துணை ஆணையர் பெருமாளிடம் கேட்டபோது, “மேயர் சுந்தர் ராவ் பூங்காவில் காவல்துறை சார்பில் எத்தகைய அறிவிப்பு நோட்டீசும் ஒட்டப்படவில்லை. இருப்பினும் சர்ச்கைக்குரிய நோட்டீசை அகற்றுமாறு எழும்பூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு அறிவுறுத்தி உள்ளேன். காவல்துறை லோகோவுடன் நோட்டீஸ் ஒட்டிய நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT