மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள தீபாவளி பரிசு என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்: வெங்காயத்தை உரிக்கும் போது வரும் கண்ணீரைவிட, அதன் விலையை கேட்கும் போது வரும் கண்ணீரே அதிகம் என்று மக்கள் கூறும் அளவுக்கு, வெங்காயம் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்து வருகின்ற.
இந்தச் சூழ்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதையும், சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதையும் கூட கருத்தில் கொள்ளாமல், நாட்டு மக்களுக்கு வழங்கும் தீபாவளிப் பரிசாக டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு மத்திய அரசு உயர்த்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
விலைவாசியை உயர்த்த வழிவகுக்கும் மத்திய அரசின் டீசல் விலை உயர்வுக்கு முதலில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும்,தவறான பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயக் கொள்கையுமே விலைவாசி உயர்விற்கு காரணம்.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரத ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், நிலைமைக்கு தகுந்தவாறு, பாரத ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியும், குறைத்தும் வருகிறது.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை ஒருபுறம், மத்திய அரசின் தவறான நிதிக் கொள்கை மறுபுறம் என இரு தாக்குதல்களை சாமானிய மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
வானளாவிய அதிகாரங்களையும், வருவாயையும் வைத்துக் கொண்டுள்ள மத்திய அரசு பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் நடந்து கொள்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். தற்போதைய டீசல் விலை உயர்வே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் தற்போதைய டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், டீசல் விலையை மாதா மாதம் உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை அன்றாடம் ஆராய்ந்து அவற்றிக்கேற்ப நடவடிக்கை எடுக்காமல் நாட்டை சீரழிக்கும் அரசுக்கு எதிராக வாக்கு எனும் அம்பை எய்த மக்கள் தயாராகிவிட்டார்கள். இதன் மூலம், ஆட்சி மாறும், மக்களின் நிலையும் உயரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.