தமிழகம்

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு ஏன்?- எச்.ராஜா புது விளக்கம்

செய்திப்பிரிவு

தேசியக் கல்விக் கொள்கையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பாஜக தேசிய செயலர் ராஜா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக விவசாய அணி சார்பில் நேற்று சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரியில் உள்ள பல்வேறு சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரிடம், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கண்டிப்பாக கடிதம் தருமாறு கட்டாயப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

தேசியக் கல்விக் கொள்கையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் ஏழை, தலித் மாணவர்களை சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தங்களுக்கு வருவாய் போய்விடும் என்ற நோக்கில் வணிக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதற்கு சில கட்சிகள் துணை போகின்றன.

மேலும் தேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருத மொழி திணிக்கப்படவில்லை. 'விருப்பப்பட்டால் படிக்கலாம்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையினி விதி தெளிவாக உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களை இந்தி படிக்க விடாமல் செய்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந்தி மொழியை படித்தனர். ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளி இந்தி கற்பிக்கும் சிபிஎஸ்இ பள்ளியாகும்.

புதுவையில் காங்கிரஸ் அரசு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவையினர் வெளியிட்ட ஆண்டு மலரில் ரோஹித் வெமுலா இறந்தது குறித்த பொய்யான தகவல்கள், தேசவிரோத தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த மலரை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் பல்கலை துணைவேந்தரை எதிர்த்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT