தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா நன்றி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழிவகுக்கும் வகையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இன்று (7.2.2016-ல்) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசு சார்பில் நான் மத்திய அரசை பலமுறை வலியுறுத்திக் கேட்டிருந்தேன் என்பதை தாங்களே நன்கு அறிவீர்.

தமிழக அரசின் கோரிக்கைகள் மீது தாங்கள் தகுந்த நேரத்தில் நல்லதொரு முடிவை எடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ளீர்கள்.

ஜல்லிக்கட்டு போட்டிகளால் தமிழக பாரம்பரிய, கலாச்சாரமும், வரலாற்று முக்கியத்துவமும் பேணப்படுகிறது. மேலும், மண்ணின் பாரம்பரிய வகையிலான காளை இணங்களை பெருக்க வேண்டிய அவசியத்தை இது போன்ற போட்டிகள் ஊக்குவிக்கினறன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT