தமிழகம்

பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்துக: முத்தரசன்

செய்திப்பிரிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரியின் துணை நதியாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் கரூர் மாவட்டங்களின் உயிர் நீராதரமாகவும் அமைந்துள்ள பவானி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடி பள்ளத்தாக்கில் உள்ள தேக்குவட்டை, மஞ்சகண்டி போன்ற இடங்களில் கேரள அரசு 6 தடுப்பணைகள் கட்டத் தொடங்கியுள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே முக்காலி என்ற இடத்திலும் மற்றொரு பகுதியிலும் தடுப்பணைகள் கட்டும் முயற்சியில் கேரளம் ஈடுபட்டபோது தமிழகம் கொந்தளித்தது. மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியை நிறுத்திவைத்தது. மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் படி எந்தவொரு மாநிலமும் பவானி ஆற்றில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தொடர்புள்ள மாநிலங்களுடன் கலந்துபேசி இணக்கமான முறையில் தீர்வுகண்டு அதன்படி செயல்பட வேண்டும். இதனை நிராகரித்து செயல்படுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கேரள அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, கடும் குடிநீர் பஞ்சம் நிலவும் சூழலில் கேரள அரசு தடுப்பனை கட்டுவது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்'' என முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT