தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 1,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பரில் பெய்த வரலாறு காணாத மழையால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழைநீர் தேங்கி நின்றதால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித் தது. குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்தினர். ஏடிஸ் கொசுக்களை முழுமையாக அழித்து விட்டதா கவும், டெங்கு காய்ச்சல் மேலும் பரவாது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், ஜனவரியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர். கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 982 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா முதலிடம்
இந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 2,753 பேரும், கர்நாடகாவில் 1,664 பேரும், மகாராஷ்டிராவில் 973 பேரும், குஜராத்தில் 621 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள னர். தமிழகத்தில் 1,000 பேர் உட்பட நாடு முழுவதும் 8,307 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் உத்தரவு
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த முழுமையான உண்மையான புள்ளி விவரத்தை தருகிறோம். அதனால்தான் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதுபோல தெரிகிறது’’ என்றனர்.
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை தடுக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.