தமிழகம்

மே 14-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சிரமம்: மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

செய்திப்பிரிவு

உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14-க்குள் நடத்துவது என்பதே நடைமுறையில் சிரமமாக உள்ள நிலையில், ஏப்ரல் 24-க்குள் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. இந்த தேர்தலில் பழங்குடியின ருக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை எனக்கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தும், டிசம்பர் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வரும் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்கக்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநரான பாடம் ஏ.நாராயணன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘‘உள்ளாட்சி அமைப்பு களின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. புதிய பிரதிநிதிகள் அடுத்த 6 மாதங்களில் பொறுப்பேற்க வேண்டுமென பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு நடந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘ஏற்கெனவே மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக தனி நீதிபதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை போன்றவற்றை அமல்படுத்தி அதன் பிறகுதான் தேர்தலை நடத்த முடியும் என்ற நடை முறை சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் அதற்கு இதுவரை அரசின் ஒத்துழைப்பு இல்லை. மே 14-க்குள் தேர்தலை நடத்துவது என்பதே நடைமுறையில் சிரமமாக உள்ள நிலையில், ஏப்ரல் 24-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று’’ என்றார்.

அப்போது வழக்கறிஞர் சிங்கார வேலன் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்து, ‘‘ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது’’ என கோரினார்.

இதையடுத்து நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்து வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தாமல் தள்ளிப்போடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோத மானது என மனுதாரர் ஏ.நாராயணன் குறிப்பிட்டுள்ளது குறித்தும் மாநில தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT