தமிழகம்

இந்தியா - சீனா பரஸ்பரம் மதிப்பளித்து நடக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

செய்திப்பிரிவு

சீனாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியாவும் சீனாவும் அவரவர் விருப்பங்களுக்கு பரஸ்பரம் மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா, துருக்கி, மெக்ஸிகோ, ஐரோப்பிய யூனியன், இந்தோனேசியா, இத்தாலி, தென்கொரியா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மோடி - ஜி ஜின்பிங்

மாநாட்டையொட்டி சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு 35 நிமிடங்கள் நீடித்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் சீனாவும் அவரவர் விருப்பங்கள், நோக்கங்களுக்கு பரஸ்பரம் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சில இருதரப்பு பிரச்சினைகளை மறைமுகமாக சுட்டிக் காட்டி இந்தியாவுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று சீனாவுக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியபோது, இருநாடுகளிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். இருநாட்டு உறவு, ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT