கோடை ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. நீர்நிலைகள் வறண்டுவிட்டன. ஏரிகள், குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையைச் சரியாக்க நாம் என்ன செய்யலாம்?
இந்திய சுற்றுச்சூழலியலாளர் அறக்கட்டளை (EFI) இதற்கான தொடக்கத்தை முன்னெடுத்திருக்கிறது. கடந்த 6 வருடங்களாக சூழலியல் சார்ந்து இயங்கிவரும் இஎஃப்ஐ, தற்போது ஏரிகளைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதில் சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், உத்திரமேரூர், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் இஎஃப்ஐ அமைப்புடன் இணைந்து பணியாற்றத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். வேலை தொடங்குவதற்கு முன்னதாக அரசு அனுமதி பெறப்பட்டு, தன்னார்வலர்களுக்குத் தேவையான பயிற்சிகளும், உபகரணங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தப்படுத்தும் பணிகள் ஏப்ரல் 1 முதல் மே 30 வரை, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சுமார் 60 நாட்கள் நடைபெற உள்ளன.
தன்னார்வலர்களின் செயல்பாடுகள் என்னென்ன?
1. ஏரி/ குளங்களை சுத்தப்படுத்தி, மீட்டெடுத்தல்.
2. விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுவர் ஓவியங்கள்.
3. ஏரி/ குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே தெரு நாடகங்கள் திரையிடல்.
4. மழை நீர் சேகரிப்புக் குழிகளை மாற்றியமைத்தல்; புதிதாக உருவாக்குதல்.
தமிழகத்தின் கீழ்க்கண்ட ஐந்து பகுதிகளில் ஏரி மற்றும் குளங்கள் சீரமைப்புப் பணிகள் நடக்கவுள்ளன.
சென்னை: கீழ்க்கட்டளை, நன்மங்கலம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், அரசன்கழனி, மாதம்பாக்கம், திருநீர்மலை, முடிச்சூர் ஏரிகளைச் சீரமைத்தல்; பெண்ணலூர், கரசங்கல், ஒரத்தூர் குளங்களை மீட்டெடுத்தல்
கோயம்புத்தூர்: செல்வசிந்தாமணி குள சீரமைப்பு மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சியில் உள்ள கிராமப்புற குளங்களை சுத்தப்படுத்துதல்.
தஞ்சாவூர்: வல்லம் பஞ்சாயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குளங்களைப் புதுப்பித்தல்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள 5 குளங்களை மீட்டெடுத்தல்
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ள 10 ஏரிகளைச் சீரமைத்தல்.
அரசை மட்டுமே குறை சொல்லாமல், ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் மட்டுமே பதிவு செய்யாமல், தமிழகத்தின் நன்னீர் நிலைகளைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் கல்லூரி, வேலைகளுக்கு பாதிப்பில்லாமல் வார இறுதி நாட்களில்.
விடுமுறைகளை வீணாக்காமல் ஆர்வத்துடன் இருக்கும் மக்கள் இதில் இணைந்து, நம் ஊருக்கு நம்மால் ஆனதைச் செய்யலாம், புதர் மேடுகளாகவும், கான்கிரீட் காடுகளாகவும் மாறிவிட்ட நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்க தன்னார்வலர்கள் தயாரா?
பதிவு செய்ய: info@indiaenvironment.org
தொடர்புக்கு: 9789477534, 9677097824