சேலத்தில் முன்னாள் டிஜிபி-யின் உறவினர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டபோது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.
சேலம் கன்னங்குறிச்சி, கோகுல்நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் முன்னாள் டிஜிபி ராமானுஜத்தின் உறவினர். இவர் சின்னகவுண்டாபுரத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். கடந்த வாரம் அசோக்குமார் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டின் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், அசோக்குமார் வீட்டுக்கு 3 பேர் சென்றது பதிவாகியிருந்தது.
இந்நிலையில், சின்ன திருப்பதி பகுதியில் ஒருவரிடம் நகையை பறித்த இளைஞரை பொதுமக்கள் விரட்டினர். அப்போது தப்பி ஓடிய அவர் தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார்.
போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில். சேலம் சின்னேரி வயக்காடு சினிமா நகரைச் சேர்ந்த பாண்டியன் (30) என்பதும், அசோக்குமார் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் இந்த சம்பவத்தில் சின்னவீராணத்தைச் சேர்ந்த மேகநாதன், அழகர் பிரபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து கன்னங்குறிச்சி போலீஸார் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து 45 பவுன் நகையை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.