நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை, கோடை மழையும் சரிவர பெய்யாததால் தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது.
உதகை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புனல் மின் உற்பத்திக்குப் பயன்படும் பார்சன்ஸ்வேலி அணை. மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, தொட்டபெட்டா மேல்/கீழ், கோடப்பமந்து மேல்/கீழ், ஓல்டு ஊட்டி மற்றும் கிளன்ராக் நீர்த்தேக்கங்களும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. உதகை நகருக்கு தண்ணீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கங்களில், நீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. உள்ளூர் நீர்த்தேக்கங்களும் வறண்டுவிட்டன.
பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பு 41.80 அடியாக (மொத்த கொள்ளளவு 58 அடி) குறைந்துவிட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கோடை சீசன் தொடங்கிவிட்டதால், உதகைக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதுதொடர்பாக உதகை நகராட்சி ஆணையர் வெ.பிரபாகரன் கூறும்போது, “நீர்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதால், உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக விநியோகிக்கிறோம்” என்றார்.