இன்றைய இளைஞர்கள், நவீன தொழில்நுட்பத்தில் புதிய தொழில்களைத் தொடங்க வேண்டும் என்று ஜெம் குழுமத் தலைவர் ஜெம் ஆர்.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் 2016-ம் ஆண்டு குடும்ப விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜெம் குழுமத் தலைவர் ஜெம் ஆர்.வீரமணி கலந்துகொண்டு, அரசுத் துறைகள் மற்றும் தொழில்துறைகளில் மெச்சத்தக்க பணியாற்றியதற்காக டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் வி.ரத்தினசபாபதி, மலேசிய போக்குவரத்து அமைச்சக சிறப்பு ஆலோசகர் எம்.கேவியஸ், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த சாமர்செட் தெரபிடிக் மருந்து உற்பத்தி நிறுவன தலைவர் வீரப்பன் சுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘கொங்கு மாமணி’ விருதை வழங்கி கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கொங்கு சமூகத்தைச் சேர்ந்த வேளாண் துறையில் சாதனை படைத்தவர்கள், பெண் சாதனையாளர்கள், இளம் சாதனையாளர்கள், வெளிநாட்டு சாதனையாளர்கள் ஆகிய 24 பேருக்கு கொங்கு சாதனை யாளர்கள் விருதை வழங்கினார்.
பின்னர் ஜெம் ஆர்.வீரமணி பேசியதாவது:
திருப்பூர் பருத்தி பயிரிடப்படும் பகுதி இல்லை. இங்கு பின்னலாடை தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இல்லை. ஆனால், அங்கு ஜவுளித் தொழில் வளர்ந்துள்ளது. அதேபோல நாமக்கல்லில் கோழி இறைச்சி, முட்டை உற்பத்தி வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைய இளைஞர்கள் நன்றாக உழைக்கும் திறனை பெற்றிருக்கும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாண்டு, புதிய தொழில்களில் ஈடுபட வேண்டும். இத்தலைமுறை இளைஞர்கள் பொருளாதாரம் குறித்து அதிகம் படிக்க வேண்டும். அயல்நாட்டு மொழிகளையும் படிக்க வேண்டும். உலகத்தின் எந்த பகுதியிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். பொருள் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க கூடாது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்கு, அந்த ஊரில் உள்ள நண்பர்கள் மூலமாக உதவி செய்ய வேண்டும். நாம் எவ்வளவு உயர்ந்தாலும், கொங்கு நாட்டு இயற்கை உணவை மறந்துவிடக்கூடாது. அதன் சிறப்புகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், சங்கத்தின் தலைவர் கே.ஏ.கணபதி, செயலர் கே.கே.ரமேஷ், பொருளாளர் எம்.எஸ்.சங்கமேஸ்வரன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக சங்கத்தின் செயலர் கே.கே.ரமேஷ் கூறும் போது, “சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இருந்து கொங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தொழில் செய்வதற்காக சென்னை வந்தனர். அவர்கள், ஒருவருக் கொருவர் உதவி செய்துகொள்வ தற்காக, கே.எம்.சென்னியப்பன் என்பவர் தலைமையில், 1961-ம் ஆண்டு சென்னை கொங்கு நண்பர் கள் சங்கம் தொடங்கப்பட்டது.
முதலில் 12 பேர் உறுப்பினர் களாக இருந்தனர். படிப்படியாக உறுப்பினர்கள் அதிகரித்த நிலையில், தற்போது 3,616 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் வசிப்பவர்கள். உலகம் முழுவதும் கொங்கு சமூகத்துக்கான சங்கங்கள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் தாய் சங்கமாக, சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் விளங்குகிறது.
மாணவர்களுக்கு விடுதிகள்
இந்த சங்கத்தின் மூலம் சென்னையில் மாணவ, மாணவியர் தங்கி படிப்பதற்கான இலவச விடுதிகள், வெளியூரில் இருந்து கொங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக சென்னை வரும்போது, குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான அறைகள் ஆகியவை ராயப்பேட்டையில் கட்டப்பட்டுள்ளன. மாணவிகள் விடுதியில் 120 பேரும், மாணவர்கள் விடுதியில் 90 பேரும் தங்கி படித்து வருகின்றனர்.
கலாச்சாரத்தை வளர்க்க ஆண்டு தோறும் குடும்ப விழாவும் நடத்தி வருகிறோம். இதில் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்துகொள்கின்றனர். இதனால் கொங்கு மண்டல கலாச்சாரம் குறித்து இளைய தலைமுறையினருக்கு தெரிய வருவதுடன், உறுப்பினர் குடும்பங் களிடையே உறவும் பலப்படுகிறது. இவ்விழாவில் வேளாண்மை, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் களை கவுரவித்து வருகிறோம்.
இந்த சங்கம் சார்பில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒருவர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு அல்லது வெளியூர் சென்றால், அவரை அந்த ஊரில் உள்ள கொங்கு சொந்தங்கள் கூடி வரவேற்பார்கள். இதனால் இங்கிருந்து, வெளியூர் செல்பவர்களுக்கு, நாம் அந்நிய மண்ணில் இருக்கிறோம் என்ற உணர்வே வராது. சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.”
இவ்வாறு ரமேஷ் கூறினார்.