தமிழகம்

அதிமுக தேர்தல் அறிக்கை: தோல்வி பயத்தால் இலவசங்கள் அறிவிப்பு- கட்சித் தலைவர்கள் கருத்து

செய்திப்பிரிவு

தோல்வி பயத்தால்தான் அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசங்களை வெளி யிடப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, ‘அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒரு சோகமானது. திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்துள்ளது. இதையெல்லாம் வாக்குறுதியாக இப்போது சொல்லும் ஜெயலலிதா, ஆட்சி யில் இருக்கும்போது ஏன் நிறைவேற்றவில்லை' என்று கேள்வி எழுப்பினார்.

ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசு மீது கடும் ஆத்திரத்துடன் இருக்கும் மக்களை சமாதானப்படுத்தும் நோக்குடன் தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. அதிமுக தேர்தல் அறிக்கையில் மொத்தம் 29 திட்டங்கள் பாமக தேர்தல் அறிக்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்டவை ஆகும். தோல்வி பயம் காரணமாகவே இலவச அறிவிப்புகளையும், வெற்றுத் திட்டங்களையும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவ்வாறு கூறியுள்ளார்.

இளங்கோவன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. ஏதோ இலவசமாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். அதை கொடுப்பதற்கு என்ன நிதி ஆதாரம் இருக்கிறது என்பதை விளக்கவில்லை. மக்களை ஏமாற்றும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை இருக்கிறது. ஆக்கபூர்வமாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதில் எதுவும் சொல்லப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்புமணி

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஏற்கெனவே, தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்காக தமிழக அரசு மாதா மாதம் ரூ.23 ஆயிரம் கோடியை வட்டியாக செலுத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் இலவச திட்டங்களை செயல் படுத்தினால் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் கோடி யாக உயரும்.

இலவச திட்டங்களை செயல் படுத்துவதால், தமிழகத்தின் பொருளாதார நிலை சரிந்துவிடும். நான் முதல்வரானால் இலவசங் களுக்குப் பதில் 1 கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவேன். இவ்வாறு கூறியுள்ளார்.

கி.வீரமணி

கோவைக்கு நேற்று வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறிய தாவது: தேர்தல் அறிக்கையில் உள்ள இலவசங்களும், திட்டங்களும் ‘மயக்க பிஸ்கட் கொடுத்து பொருட்களை பறிப்பது’ போல மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரம். அதிமுகவின் தோல்வி பயமே இந்த அறிவிப்புக்கு காரணம். இலவசத் திட்டங்கள், எந்த நிதி ஆதாரத்தில் நிறைவேற்றப்படும் என்பது குறித்து அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கும், அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கும் உள்ள முரண்பாடுகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. இவ்வாறு வீரமணி கூறினார்.

கனிமொழி

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக தனது தேர்தல் அறிக்கையை அதிமுகவினர் ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். புதுமையானவை ஏதும் இல்லை. நெல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஆட்சியில் இருந்த போது அதனைச் செய்யவில்லை. பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமாகும் என்பதுதான் தெரியவில்லை. இது ரூ.50 ஆயிரம் கோடி கடனை அரசு மீது சுமத்தும். ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி கடன் உள்ளது’ என்றார் அவர்.

முகுல் வாஸ்னிக்

காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷை ஆதரித்து இத்தலார் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், விவசாயத்துக்காக அணை, தொழில் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகள் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி கருப்புப் பணம் மீட்கப்பட்டு, அனைவரது வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார். தேர்தல் வாக்குறுதிகளை மறப்பதில் மோடிக்கு மூத்த சகோதரி ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT