தமிழகம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: 10 லட்சம் பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் புதிய தலைமுறை தனியார் வங்கிகள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து, அகிய இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் ‘தி இந்து’விடம் நேற்று கூறிய தாவது:

ஊதிய உயர்வு, வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மத்திய அரசுடன் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து, திட்டமிட்டபடி புதன்கிழமை (இன்று) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில், 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவர். தமிழகத்தில் 65 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே என் தலைமையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்கவில்லை.

பழைய தலைமுறை தனியார் வங்கிகளான கரூர் வைஸ்யா வங்கி, தனலஷ்மி வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி, கர்நாடகா வங்கி, சவுத் இந்தியன் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக வங்கி சேவை முழுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT