சென்னை அரசு ஸ்டான்லி மருத் துவமனையில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடந்த வாரம் தொடங்கப் பட்ட தோல் வங்கிக்கு 2 பேர் தோல் தானம் செய்துள்ளனர்.
ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத் துவமனை அழகியல் துறையில் ரூ.70 லட்சம் செலவில் ‘தோல் வங்கி’ கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கப்பட்டது. மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந் தவர்களிடம் இருந்து முதுகு, பின்னங்கால் மற்றும் பின்னந் தொடையில் இருந்து தோல் பெறப்பட்டு உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கப்படுகிறது. தீ, அமிலம், மின்சாரம், மருந்து மற்றும் ரசாயன அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த வங்கியிலிருந்து தோல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
மூளைச்சாவு, இயற்கை மரணம்
இது தொடர்பாக மருத்துவ மனை டீன் (பொறுப்பு) டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறியதாவது:
நாட்டிலேயே முதல்முறையாக இங்கு தோல் வங்கி தொடங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கம்பேடு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (41) என் பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவருடைய தோலும் தானமாக பெறப்பட்டு தோல் வங்கியில் வைக்கப்பட்டுள் ளது. அதேபோல் இயற்கையாக மரணம் அடைந்த மற்றொருவரிடம் இருந்தும் தோல் தானம் பெறப் பட்டுள்ளது. தோல் வங்கி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட் டுள்ளது. தோல் வங்கி தொடங்கிய ஒரு வாரத்தில் 2 பேர் தானம் செய் துள்ளனர். தற்போது மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந் தவர்களிடம் இருந்து மட்டும் தோல் தானம் பெறப்படுகிறது. வரும் காலத்தில் உயிருடன் இருப்பவர் களிடமிருந்தும் தோல் தானம் பெறப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
70 லட்சம் பேர் தீக்காயம்
தோல் வங்கி பற்றி அழகியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக் டர் ஜி.ஆர்.ரத்னவேல் கூறியதாவது:
தானமாக பெறப்படும் தோல் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சுத்திகரித்து பதப்படுத்தப்படும். 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை யில் 5 ஆண்டுகள் வரை தோல் பரா மரிக்கப்படும். தீ போன்ற விபத்து களால் தோல் பாதிக்கப்பட்டவர் களுக்குத் தானமாக பெறப்பட்ட தோல் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். 15 நாட்களில் புதிய தோல் வளர்ந்த பிறகு, மேலே பொருத்தப்பட்ட இந்த தோல் தானாகவே உதிர்ந்துவிடும். நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் பேர் தீக்காயம் அடை கின்றனர். இவர்களின் தோல் செய லிழந்த நிலையில், உடலின் நீர்ச்சத்து இழப்பு மற்றும் தொற்று நோய்கள் அதிகரிப்பு போன்ற வற்றால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. அவர்களுக்குத் தானமாக பெறப் பட்ட தோல் தற்காலிக போர்வை யாக பயன்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வாழ்க்கைக்கு விரைவில் திரும்பவும், மருத்துவச் செலவு களைக் குறைக்கவும் தோல் வங்கி வழிவகுக்கிறது. பதிவு செய்யப்பட்ட வரிசை முறையில் தேவையான நோயாளிகளுக்குத் தோல் பொருத்தப்படும்.
தோல் தானம் தகுதி
இயற்கை மரணம் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக் கப்பட்டவர்கள் தோல் தானம் செய்யலாம். எச்ஐவி, ஹெபடை டிஸ் பி, பால்வினை மற்றும் தோல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் தோலைத் தானமாக பெற இயலாது. தோல் தானம் செய்ய அழகியல் துறை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல் லூரி மருத்துவமனை, சென்னை - 600001 என்ற முகவரியை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேஎம்சி-யில் விரைவில்
தமிழகத்தில் தீக்காய சிகிச் சைக்குப் பெயர் பெற்ற சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தோல் வங்கி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபு கூறும்போது, “இந்த மருத்துவமனையில் தீக் காயங்களால் பாதிக்கப்பட்டவர் களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக தனிப் பிரிவு உள்ளது. மருத் துவமனையில் தோல் வங்கி அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. அரசின் அனுமதி கிடைத்ததும் தோல் வங்கி திறக்கப்படும். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தோல் வங்கி யின் மூலம் பயன்பெறுவார்கள்” என்றார்.