சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்க்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்க்க எழும்பூர் நீதிமன்ற காவலில் சிறைத்துறை மற்றும் நீதித்துறை ஊழியர்களின் உதவியுடன் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ஒருநாள் அரசு வீடியோகிராபர் மூலம் அவரை வீடியோ எடுக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், சூளைமேடு மேன்ஷனில் ராம்குமார் தங்கி யிருந்தபோது ஏற்கெனவே கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணங்களுடன், ராம்குமாரின் தற்போதைய கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்க்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவியல் நடுவர் (பொறுப்பு) கோபிநாதன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. போலீஸாரின் கோரிக்கைக்கு ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.