ஞானதேசிகன் ராஜினாமாவைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை நாளை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களை ஜி.கே.வாசன் நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தொடர்ந்து சில ஆண்டுகளாகவே தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. கட்சி பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றை காங்கிரஸ் தலைமை சரியாக அணுகவில்லை. இதை பலமுறை எடுத்துச் சொல்லியும் இயக்கத்தை வலுப்படுத்தக்கூடிய பதில் வரவில்லை.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கடந்த 5 மாதங்களாக தமிழக காங்கிரஸ் மீது கட்சி மேலிடம் பாராமுகமாக இருந்ததன் விளைவு இயக்கம் மேலும் வலுவற்றதாக ஆகிவிட்டது. இதற்கெல்லாம் மேலாக உறுப்பினர் அட்டையில் காமராஜர் மற்றும் மூப்பனார் படத்தைப் போட வேண்டுமா, வேண்டாமா என்ற சர்ச்சை கிளம்பியபோதே, தொண்டர்களின் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது மறைந்த தமிழக தலைவர்களின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனடிப்படையில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் பொருளாளர் ராஜினாமா செய்தனர். இதுபோன்ற அசாதாரண சூழலுக்கு பிறகு உறுப்பினர் அட்டை தொடர்பாக அகில இந்திய தலைமை மறுப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல. கட்சியில் சில முக்கிய தலைவர்களின் தவறான அரசியல் அணுமுகுறை வேதனை அளிக்கிறது.
தமிழகம் முழுவதும் முக்கிய தலைவர்களை சந்தித்து கருத்துகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். தொண்டர்கள் என்னை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். வரும் காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ‘வளமான தமிழகம்; வலிமையான பாரதம்’ அமைக்க பாடுபடுவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3-ம் தேதி (நாளை) அறிவிப்போம்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.