ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழர் இளைஞர் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் இளைஞர் கட்சியைச் சேர்ந்தவர் எல்.காமேஷ்வரன். இவர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்திருந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. அதைக் கண்டித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு, காமேஷ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர்.
இது தொடர்பாக, காமேஷ்வரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எனது வேட்புமனுவில் படிவம் 26-ல் ஒரு தாள் காணவில்லை. அதனால் மனுவை நிராகரிப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். என்னிடம் வழங்கப்பட்டுள்ள அத்தாட்சி சான்றில், அனைத்து ஆவணங்களும் இருப்பதாக, தேர்தல் நடத்தும் அலுவலர், கடந்த 17-ம் தேதி கையெழுத்திட்டுள்ளார். அதைக் காட்டி கேட்டபோது, “நான் 19-ம் தேதியிலிருந்து தான் வேட்புமனு பெறுகிறேன். அதற்கு முன்பு தாக்கல் செய்த மனு குறித்து எனக்கு தெரியாது” என்று தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் தெரிவித்தார். அதைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றார்.