ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயரும் எனக் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 350-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 44 சாவடிகள் உள்ளன. அதில் 26 சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்தும், 18 சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்தும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 23 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை மட்டுமின்றி தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 18 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பட்டறைபெரும்புதூர், வானகரம், கோவை மாவட்டம் கன்னியூர், வாடிப்புரம், பரனூர், சேலம் மாவட்டம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்டம் சாலைபுதூர், பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை மாவட்டம் எட்டூர், கப்பலூர், நாங்குநேரி, திருச்சி மாவட்டம் சிட்டம்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் உள்ளிட்ட 18 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைத் துறை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என தெரிகிறது. இந்த கட்டண உயர்வால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.