முதல்வர் தனது தொகுதியான ஆர்.கே.நகரைச் சேர்ந்த 1,248 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கும் பணியை 5 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதியான ஆர்.கே.நகரில், தொகுதி மக்கள் மேம்பாட்டுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ரூ.180 கோடியே 41 லட்சம் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.193 கோடியே 26 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்களின் குறைகளை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தண்டையார்ப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 1,248 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன. இதன் அடையாளமாக இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார். இந்த பயனாளிகள் அனைவருக்கும் ஆகஸ்ட் மாதம் முதல், மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.