கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுக் கருத்துகளையும், கோட்பாடுகளையும் சகித்துக் கொண்டு, அதற்கு ஜனநாயக ரீதியாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வதுதான் ஆக்கபூர்வமான அரசியல்.
ஆனால் அதை தவிர்த்து விட்டு, சில தீய சக்திகள் கட்சி அலுவலகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அச்சுறுத்த நினைப்பதையும், அதன்மூலம் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும், அதிமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே லட்சியத்தின் அடிப்படையில், அதிமுக அரசு வழக்கம் போல் அமைதி காக்காமல், கட்சி அலுவலகங்கள் மீது இதுமாதிரியான தாக்குதல் நடத்தும் அராஜகக் கும்பலை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.