புதுச்சேரியில் இருந்து கோயம்புத்தூருக்கு பிஆர்டிசி சார்பில் இயக்கப்பட்டு வந்த வோல்வோ பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பிஆர்டிசி) சார்பில் புதுச்சேரியில் இருந்து கோயம்புத்துாருக்கு பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து புதுச்சேரி - கோவை இடையே வோல்வோ பேருந்து சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த பேருந்து நாள்தோறும் இரவு 10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, அவிநாசி வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும். அதே போல, மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பேருந்து குளிர்சாதன வசதியுடன் 45 இருக்கைகள் கொண்டதாகும். ஒரு வழிக்கட்டணமாக ரூ. 600-ம், முன்பதிவுக் கட்டணமாக ரூ.25-ம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த பேருந்து சேவை மூலம் நாள்தோறும் ரூ.50 ஆயிரம் வரை வசூலானது.
இதற்கிடையில் புதுச்சேரி - கோவை வோல்வோ பேருந்துகள் சேவை கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு செல்ல முடியாமல் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி பிஆர்டிசி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘புதுச்சேரி - கோவை பேருந்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மாதத்திற்கு ரூ.15 லட்சம் வரை வருவாய் கிடைத்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை அருகே பேருந்து விபத்தில் சிக்கியது. இதனால் பேருந்து பெரும் சேதமடைந்தது. பேருந்தை சரி செய்ய சுமார் ரூ. 6 லட்சத்திற்கும் மேலாக பணம் செலவாகும். இதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அதோடு எங்களிடம் போதிய நிதியும் இல்லை. இதனால் பேருந்தை சரி செய்து இயக்க முடியவில்லை. விரைவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்று கூறுகின்றனர்.
3 மாதங்களாக ஒரு சிறு பிரச்சினையை சரிசெய்யாமல் மொத்தமாக பேருந்து சேவையையே நிறுத்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.