தமிழகம்

மது அருந்துவோரிடம் கொய்யா பழம் வழங்கி சுயேச்சை வேட்பாளர் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

மது அருந்துவோர் தொட்டுக் கொள்ள கொய்யா பழத்தை வழங்கி, சுயேச்சை வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம், தண்டையார் பேட்டையில் நேற்று நூதன பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில அமைப்பாளரும், சுயேச்சை வேட்பாளருமான எம்.எஸ்.ஆறுமுகம் ஒரு படி மேலே சென்று, மதுக்கடைகளுக்கு முன்பாக, மதுக்குடிப்போரின் சிறுநீரகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மதுவுக்கு தொட்டுக்கொள்ள கொய்யா பழங்களை சாப்பிடுங்கள் என்று கூறி கொய்யாப் பழங்களை துண்டுகளாக நறுக்கிக் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

ஒவ்வொரு மதுக்கடை முன்பும் இவர் பிரச்சாரம் செய்யும்போது, மது குடிப்போர் அனைவரும் அவரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். அமைப்பின் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் உடனிருந்தார்.

எம்.எஸ்.ஆறுமுகம் கூறும் போது, “தமிழக பட்ஜெட்டே, மதுக்கடைகள் மூலமாக கிடைக் கும் வருமானத்தை மையமாக கொண்டுதான் போடப்படுகிறது. ஆனால் அந்த வருமானத்தை வழங்கும் மது குடிப்போரின் நலன் பாதுகாக்கப்படுவதில்லை. அவர்களின் நலனுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். நாங்கள் வென்றால் மதுவினால் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் குழந்தைகளுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும்” என்றார்.

          
SCROLL FOR NEXT