தமிழகம்

திரைப்படத் துறையில் கட்டப் பஞ்சாயத்து செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

திரைப்படத் துறையில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பிரச்சினைகள் தீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை செயல ரிடம் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளை, அதற்காக பிரச்சினைகள் தீர்க்கும் குழு அமைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது திரைத்துறையில் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கின்றன. திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படுவதுடன், கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. பல ஊர்களில் படங்கள் திரையிடப்படுவதை தடுத்து, ஒரு சிலர் தங்கள் திரையரங்குகளில் மட்டும் திரையிடுகின்றனர். இதைப் பயன்படுத்தியே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நான்கைந்து பேர் கூட்டாக சேர்ந்துகொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். இதனால், பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, திரைப்படத் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பிரச்சினைகள் தீர்க்கும் குழுவை அமைத்து, திரைப்படத் துறையை வாழ வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT