செம்மஞ்சேரி அருகே ஐ.டி. நிறுவனப் பொறியாளரை கத்தியால் குத்திக் கொன்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரது செயின், பர்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கே.வி.நாயுடு. இவரது மகன் ஹர்ஷன் (24) பெரும் பாக்கம் பகுதியில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தார். பெரும்பாக்கம் நூக்கம் பாளையத்தில் உறவினரின் அடுக்குமாடி வீட்டில் தங்கிக்கொண்டு வேலைக்குச் சென்றுவந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வேலை முடிந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு நேதாஜி சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். இந்த சாலையின் வலது புறத்தில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்துவருகிறது. இரவு நேரத்தில் இங்கு ஆள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.
அப்பகுதியை ஹர்ஷன் கடந்து சென்றபோது, இருளில் மறைந்திருந்த கொள்ளையர்கள் சிலர் ஹர்ஷனை வழிமறித்துள்ளனர்.
அவரது வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவரது செயின், ஐபேட், பர்ஸ் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் விழுந்த ஹர்ஷன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் இறந்த தகவல் ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தெரிவிக் கப்பட்டது.
மேலும் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.