கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு ஹபீஸ் (7) என்ற சிறுவன் நேற்று உயிரிழந்தான். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 6 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கடையநல்லூர் புதுத்தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர். செங் கோட்டையில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகன் ஹபீஸ் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். கடையநல்லூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பியிருந்தான். நள்ளிரவுக்குப்பின் மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடையநல்லூர் வட்டாரத்தில் கடந்த 2 மாதங்களாக மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டும் பாதிப்பு குறையவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டு உள்ள னர். கடந்த 2 மாதங்களில் மட்டும் மர்மகாய்ச்சலுக்கு 6 பேர் வரை பலியாகிவிட்டனர். இவர் களில் 2 பெண்கள் உட்பட 3 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள்.