தமிழகம்

இலவச வேட்டி-சேலை: குன்னூரில் முதல்வர் விழா

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா குன்னூரில் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரொக்கமாக ரூ.100 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த சிறப்பு பொங்கல் பரிசு ஒரு கோடியே 84 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த விலையில்லா வேட்டி சேலையும் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்பட உள்ளது. சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடக்க விழா நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தூய வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை முதல் பயனாளிகளுக்கு, பொங்கல் பரிசும் வேட்டி, சேலையும் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளன.

SCROLL FOR NEXT