திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
திமுக செயல் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரான பிறகு வரும் முதல் பிறந்த நாள் என்பதால் தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடும் திமுகவினர் கவி யரங்கம், கருத்தரங்கம், பட்டி மன்றம், பொதுக்கூட்டங்கள், ஏழை களுக்கு உதவிகள், அன்னதானம் வழங்குதல், மாணவ, மாணவி களுக்கு கல்வி உதவித் தொகை, புத்தகங்கள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
வேண்டுகோள்
பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஸ்டாலின், ‘பேனர், கட்-அவுட்டுகள் என ஆடம்பரமாக கொண்டாடாமல் மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழாக்களை நடத்த வேண்டும். பிறந்த நாளில் பொன்னாடைகள் அணி விப்பதற்குப் பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.
பிறந்த நாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துப் பெறுகிறார். பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். காலை 8 மணி முதல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்துக்களைப் பெறுகிறார்.
திமுகவின் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் தனித்தனியாக ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.