எழுத்தாளர் பெருமாள்முருகனின் நாவலை தடை செய்யக் கோரி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன். இவர் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் கடந்த 2010-ம் ஆண்டில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் ‘ஒன் பார்ட் ஆஃப் வுமன்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டு வெளியானது.
இந்த நாவல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் குறித்து விமர்சிப்பதாக இந்து அமைப்பினர் சமீபத்தில் புகார் எழுப்பினர். புத்தகத்தை தடை செய்யக் கோரி திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடத்தி, புத்தகத்தை எரித்தனர்.
இதுபற்றி திருச்செங்கோடு ஆர்எஸ்எஸ் நிர்வாகி கே.மகா லிங்கம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘புத்தகத்தில் 10 இடங்களில் கடவுள் குறித்தும், கடவுளை வழிபடும் பெண்கள், கோயில் அருகே உள்ள வீதிகள் குறித்தும் புனைவு என்ற பெயரில் அவதூறாக எழுதியுள்ளார். அதைக் கண்டித்து ஆர்எஸ்எஸ் மற்றும் கோயில் திருவிழா அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது’’ என்றார்.
இதற்கிடையில், புத்தகம் எரிக்கப்பட்டதை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் திருவான்மியூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத் தலைவர் ச.தமிழ்செல்வன், எழுத்தாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர்.
நாவலாசிரியர் விளக்கம்
நாவலாசிரியர் பெருமாள்முருகனைத் தொடர்புகொண்டபோது, அவர் கூறியதாவது:
திருச்செங்கோடு வைகாசி தேர்த் திருவிழாவை நாவல் கொச்சைப்படுத்துவதாகக் கூறுகின்றனர். பிறந்து வளர்ந்த ஊரை கொச்சைப்படுத்த யாருக்கேனும் மனம் வருமா? 1960 முதல் 2000 வரையிலான அந்த ஊரை அணுஅணுவாக அறிவேன். ஊரைச் சார்ந்து நிலவும் சில வழக்கங்களை புனைகதையாகிய நாவலுக்குப் பயன்படுத்திக்கொண்டேன்.
இந்த நாவல், திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியின் துயரம் பற்றியது. இந்நாவலில் கூறப்பட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் வழக்கம் பரவலாக நிலவியதற்கு நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானிடவியலில் சான்றுகள் உள்ளன. ஆய்வறிஞர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், தியடோர் பாஸ்கரன், அ.கா.பெருமாள் ஆகியோர் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி சில பகுதிகள் எழுதியுள்ளேன்.
கடவுளையோ, கோயிலையோ குறைகூறவில்லை. பெண்களையும் சாதியையும் இழிவுபடுத்தி எழுதியதாக கூறுகின்றனர். குழந்தைப் பேறு இல்லாத பெண்ணின் துயரத்தை காட்சிப்படுத்தியுள்ளேன். நாவலில் பாத்திரங்கள் அவர்களின் கோணத்தில் இருந்து பேசுவது இயல்பு. அதேபோல, வாழ்க்கையைச் சார்ந்து எழுதப்படும்போது நம்பகமான வகையில் அமைவதற்காக இடம், சாதி முதலிய அடையாளங்களைப் பயன்படுத்துவதும் இயல்பு.
விமர்சனங்கள் இருந்தாலும் கருத்துரீதியாக எதிர்கொள்வதே சரி. இலக்கியம் பற்றி அறிந்தவர்கள், துறை விமர்சகர்கள், வல்லுநர்கள் கருத்துச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவும் பரிசீலிக்கவும் தயாராக இருக்கிறேன். இந்நாவல் யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடனோ, கொச்சைப்படுத்தும் எண்ணத்துடனோ எழுதப்பட்டதல்ல. எவர் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது.
இவ்வாறு பெருமாள்முருகன் கூறியுள்ளார்.