தமிழகம்

வாடிவாசலில் ஏறுதழுவும் வீரன் வடிவமைப்பு: பார்வையாளர்களை கவர்ந்த பழக் கண்காட்சி

செய்திப்பிரிவு

நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார். இதில், 2000 கிலோ ஆரஞ்சு, சாத்துக்குடி, பச்சை மற்றும் கருப்பு திராட்சை பழங்களைக்கொண்டு 6 அடி உயரம் மற்றும் 20 அடி நீளத்தில் வாடிவாசல் உருவாக்கப் பட்டிருந்தது. வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியேறும் காளையை, வீரர் ஏறுதழுவுதல் போன்ற வடிவமைப்பு கண்காட்சி யின் சிறப்பம்சமாக அமைந்தது.

திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை சார்பில் மாதுளை பழங்களால் வெள்ளாட்டின் உருவ அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. கடலூர் தோட்டக்கலைத் துறை சார்பில் அன்னாசி, தர்பூசணி, பப்பாளி மற்றும் திராட்சை பழங்களால் செம்மறி ஆட்டின் ஒரு வகையான மெட்ராஸ் சிவப்பு ஆடு மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் சார்பில் ஆரஞ்சு பழங்களால் எருது, கோவை மாவட்டம் சார்பில் பலா, திராட்சை, ஆரஞ்சு பழங்களால் ஆன குரும்பை ஆடு மாதிரி, மதுரை மாவட்டம் சார்பில் முலாம் பழங்களால் ராஜபாளையம் நாய் உருவம், தேனி மாவட்டம் சார்பில் 80 கிலோ திராட்சை பழங்களால் கன்னி ஆடு உருவம், சேலம் மாவட்டம் சார்பில் 110 கிலோ திராட்சை பழங்களைக்கொண்டு காளை உருவம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் ஆரஞ்சு பழங்களால் கொடி ஆடு உருவம், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் மாம்பழங்கள் மற்றும் திராட்சை பழங்களால் காட்டெருமை உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதில் சிறப்பம்சமாக தருமபுரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் தமிழகத்தின் மாநில விலங்குகளான வரையாடு 50 கிலோ சப்போட்டா பழங் களைக்கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அனைத்து அரங்குகளிலும் விலங்குகளின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பள்ளி விடுமுறை நாட்கள் நீடிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

SCROLL FOR NEXT