கர்நாடக அரசு காவிரி நதிநீர் தொடர்பாக வன்முறைச் சம்பவங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. அங்குள்ள தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர் விவகாரத்தில் இரு மாநிலத்தின் விவாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21.09.2016 முதல் 27.09.2016 வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு கர்நாடக அரசு நாள்தோறும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், மத்திய அரசு 4 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதித்து தமிழக டெல்டா விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும், மத்திய அரசும் 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை ஏற்று, சரியாக செயல்படுத்தி காவிரி நதிநீர் விவகாரத்தில் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், கர்நாடக அரசு காவிரி நதிநீர் தொடர்பாக வன்முறைச் சம்பவங்களுக்கு இடம் கொடுக்க கூடாது, அங்குள்ள தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு தர வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி மாதம் தோறும் தொடர்ந்து தங்கு, தடையின்றி முழுமையான தண்ணீர் வழங்கிட வேண்டும்.
இரு மாநில மக்களிடையே உள்ள நல்லுறவு தொடரவும், ஒற்றுமையை நிலைநாட்டவும் கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். இதற்காக தமிழக அரசு - கர்நாடக அரசை வற்புறுத்தியும், மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.