பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வரும் தகவல்களையடுத்து தமிழகம் முழுவதும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இல்லை என்றும், இதுதொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பிளாஸ்டிக் அரிசி, முட்டை, சர்க்கரை தயாரிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும், மக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியது. வட மாநிலங்களிலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக கடந்த வாரம் செய்திகள் வெளி யாகின. ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை சிக்கியதா கவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளன. வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இந்தச் செய்தி வேகமாக பரவியதால் தமிழகம் முழுவதும் மக்களிடம் பதற்றம் ஏற்பட்டது. கடைகளில் அரிசி வாங்கச் சென்ற மக்கள் தீவிர விசாரணைக்குப் பிறகே அரிசியை வாங்கினர்.
இது தொடர்பாக கடந்த 7-ம் தேதி உணவுத் துறை அமைச்சர் காமராஜ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு அறவே இல்லை. எனவே, பிளாஸ்டிக் அரிசி உள்ளே நுழைய வாய்ப்பில்லை. அதையும் மீறி எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்திருந்தார்.
குவிந்த புகார்கள்
இந்தச் சூழலில் கடந்த 9-ம் தேதி சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உணவகத்தில் பிளாஸ்டிக் அரிசியைக் கொண்டு சமைக்கப்பட்ட சாதம் பரிமாறப்பட்ட தாக புகார் எழுந்தது. போக்குவரத் துக் கழக ஊழியர்கள் போராட்டத் திலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று பணிமனை உணவகத்தில் இருந்த அரிசி மூட்டைகளை சோதனையிட்டனர். அதில் பிளாஸ்டிக் அரிசி இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இதையடுத்து வேதியியல் சோத னைக்காக கிண்டியில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அரிசி மாதிரி களை அதிகாரிகள் அனுப்பிவைத் தனர். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பரவலாக புகார்கள் வந்துள்ளதால் அங்கும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக உணவு பாது காப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை உள்ளதா என்பதை கண்டறிய பரவலாக தொடர் சோதனைகள் நடத்தி வருகிறோம். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் அரிசியில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் commrfssa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 94440 42322 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.
திருவள்ளூரில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று முன்தினம் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பிளாஸ்டிக் முட்டையால் செய்யப்பட்ட பப்ஸ் சாப்பிட்டதால்தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக செய்தி பரவியதால் திரையரங்கை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடரும் சோதனை
இதற்கிடையே சென்னை, மதுரை, திருநெல்வேலி, கன்னியா குமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக் கான இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா என்பதை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கிருந்து அரிசி வாங்கப்படுகிறது, பொது மக்களிடம் இருந்து ஏதாவது புகார்கள் வந்துள்ளதா என்பது குறித்து கடைக்காரர்களிடம் விசாரணையும் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் தட்டுப்பாடு இல்லாமல் அரிசி கிடைக்கிறது. நியாய விலைக் கடைகளில் விலை யில்லா அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தின் எந்தவொரு இடத்தி லும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்பட வில்லை. ஆனால், சிலர் வேண்டு மென்றே முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங் களில் பிளாஸ்டிக் அரிசி, முட்டை, சர்க்கரை விற்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் அரிசி சாதம் பரிமாறப் பட்டதாகவும் வதந்தி பரப்பி வருகின்றனர்.
மக்களிடம் குழப்பத்தையும். அச்சத்தையும் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது வதந்தி என்ற போதிலும், தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தச் சோதனைகளில் தமிழகத்தில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமரசம் இல்லை
இதன்பிறகும் பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக யாராவது வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் வதந்தி பரப்பும் பதிவுகளை முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள் கிறேன்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.