தமிழகம்

சென்னையிலும் குறைவான பேருந்துகள் இயக்கம்: மக்கள் கடும் பாதிப்பு

செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் 30 சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சென்னையில் மத்திய பணிமனை, வடபழனி, தியாகராயநகர், அண்ணாநகர், அடையார், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், திருவான்மியூர், அயனாவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர், எண்ணூர் உட்பட மொத்தம் 31 பணிமனைகள் உள்ளன. ஒவ்வொரு பணிமனையில் இருந்து வழக்கமாக 150 முதல் 250 பேருந்துகள் வரையில் இயக்கப்படும். ஆனால், நேற்று காலையில் இருந்து வெறும் 20 முதல் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களும், தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 30 சதவீத பேருந்துகளை ஓட்டினர். பெரும்பாலான இடங்களில் முழு அளவில் பேருந்துகளை இயக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல வேண்டிய பெரும்பாலான பேருந்துகளும் நேற்று நிறுத்தப்பட்டன. இதனால், ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பகலிலேயே இயக்க தொடங்கினர். கூடுதல் கட்டணம் வசூலித்ததால், பொதுமக்கள் ஆம்னி பேருந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களுக்கு முன்பும், அண்ணாசாலை மற்றும் ஜிஎஸ்டி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் நெடுஞ்சாலை, வடபழனி நூறடி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் மாநகர பேருந்துக்காக மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

இது தொடர்பாக எழும்பூர் ரயில் நிலையம் முன்பு பேருந்துகளுக்காக காத்திருந்த பொதுமக்கள் சிலரிடம் கேட்ட போது, ‘‘வெளியூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்து விட்டோம். ஆனால், இங்கிருந்து எப்படி வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை. சுமார் ஒன்றரை மணிநேரமாக ஒரு மாநகர பேருந்து கூட இந்த வழியாக செல்லவில்லை. இதனால், நாங்கள் தான் அவதிப்படுகிறோம். ஆட்டோக்களில் கேட்டால் அண்ணா சாலை செல்வதற்கு ரூ.200 என கேட்கின்றனர். நாங்கள் என்ன செய்வது. பாதிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு பெரும்பாலான பேருந்துகள் ஓடாமல் இருக்கின்றன. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT