தமிழகம்

சென்னையில் ஓடும் ஆந்திர மாநில ஆட்டோக்கள்

எஸ்.சசிதரன்

சென்னை மாநகரில் சில நாள்களாக நடைபெற்றுவரும் சோதனையில், ஆந்திர மாநில ஆட்டோக்கள் ஓடுவது தெரியவந்துள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சோதனையின்போது இத்தகைய ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் தப்பித்தால் போதும் என்று வாகனத்தை விட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர்.

சென்னையில் கடந்த மாத இறுதியில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை, தமிழக அரசு அறிவித்தது முதல் நடந்துவரும் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாத 15 ஆயிரத்துக்கும் மேலான ஆட்டோக்கள் இருப்பது தெரியவந்தது.

இந்த சோதனைகளின்போது பல வேடிக்கை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சென்னையில் பல இடங்களில் சிக்கிய ஆட்டோக்களை, தேசிய தகவல் மையத்தின் இணையதளத்தினுள் சென்று, ஆட்டோவின் பதிவு எண், சேஸிஸ் எண் மற்றும் என்ஜின் எண்ணை என்ட்டர் செய்யும்போது, அவற்றில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்ததாகத் தெரியவந்தது. மேலும், அதன் ஓட்டுநர்கள், அதிகாரிகளைப் பார்த்ததும், வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர்.

"தண்டையார்பேட்டையில் மட்டும் மூன்று ஓட்டுநர்கள் அவ்வாறு ஓடிவிட்டனர். ஆனால், வேறு இடங்களில் சிக்கிய வெளி மாநில ஆட்டோக்களை ஓட்டிய நபர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்டோக்கள் வட சென்னையை ஒட்டியுள்ள ஆந்திர மாநில பகுதிகள் வழியாக சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன. புதிதாய் வர்ணம் அடித்து சென்னையில் ஓடும் ஆட்டோக்களைப் போன்று அடையாளங்களை மாற்றி இயக்கப்படுவதால் அதிகாரிகளால் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. தற்போது நடைபெறும் திடீர் சோதனைகளின்போதுதான் இந்த உண்மை தெரியவந்தது.

இத்தகைய ஆட்டோக்கள் கொலை, கொள்ளைகளில் தொடர்புடையனவா? அவை எப்படி சென்னைக்கு வந்தன என்பது பற்றி அதிகாரிகள் விசாரண நடத்திவருகின்றனர்.

SCROLL FOR NEXT