தமிழகம்

ராஜபாளையம் அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்: வீரமணி கண்டனம்

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கே.தொட்டியபட்டி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ராஜபாளையம் அருகே கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் வாழும் அருந்ததியர் மக்கள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. குடிசைகளை கொளுத்தியுள்ளனர். குடும்பத்துக்கு ரூ. 2 ஆயிரம் வரி வசூலித்து இந்த வன்முறை வெறியாட்டத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

சூறையாடப்பட்ட வீடுகளுக்குப் பதில் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும், காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அருந்ததியர் மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து திராவிடர் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்துள்ளனர். தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT