தமிழகம்

பாரம்பரிய கட்டிடங்களுக்கு வரிவிலக்கு அளிக்க மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம்

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களுக்கு வரி விலக்கு அளிக்க மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

சென்னையில், சென்ட்ரல் ரயில் நிலையம், புனித ஜார்ஜ் கோட்டை, ராயபுரம் ரயில் நிலையம், கல்சா மகால் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு சென்னை மாநகராட்சியின் சொத்து வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. சொத்து வரி செலுத்தி வரும் பாரம்பரிய கட்டிடங்களுக்கும், வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று, மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் வருகின்றன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டப்படி, சொத்து வரி விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதே சட்டப்படி, மாநகரப் பகுதியில் உள்ள சில கட்டிடங்களுக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, பண்டைய நினைவுச் சின்ன பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரிய கட்டிடங்களுக்கு, சொத்துவரி விலக்கு அளித்து ஆணை வழங்கப்பட வேண்டும். வரிவிலக்கு பெறும் கட்டிடங்கள் குடியிருப்பாகவோ, அலுவலகமாகவோ பயன்பாட்டில் இருக்கக் கூடாது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, சில பாரம்பரிய கட்டிடங்களுக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

அதனால், பண்டைய நினைவுச் சின்ன கட்டிடங்கள் பாதுகாப்பு சட்டப்படி பாதுகாக்கப்பட்டு வரும் சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களுக்கு சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து ஆணை பிறப்பிக்க, மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT