ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு தெரவித்த அவர், சனிக்கிழமை மாலை சென்னை திரும்பினார். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரன் அணியும் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக படங்கள், வீடியோ ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பணம், பொருள்கள் வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளுக்கு அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் சிலர் துணையாக இருப்பது குறித்தும் புகார் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் பல இடங்களில் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இவற்றை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.