அரக்கோணத்தில் அடகுக் கடை உரிமையாளரை கட்டிப் போட்டு 400 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மதுரை பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (75). இவர், கடந்த 25 ஆண்டுகளாக தனது வீட்டின் ஒரு பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் கிருஷ்ணவேணி(68). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் திருத்தணியிலும் வசித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி,சென்னையில் உள்ள மகனை பார்க்க கிருஷ்ணவேணி கடந்த 13-ம் தேதி இரவு சென்னை சென்றார். பொங்கல் பண்டிகையன்று கிருஷ்ணமூர்த்தி வீட்டை பூட்டிக்கொண்டு திருத்தணிக்கு சென்றுவிட்டு, அன்று மாலை வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கிருஷ்ணமூர்த்தியின் முனகல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணி அடைத்தபடி காயங்களுடன் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். வீட்டில் இருந்த பீரோ, பெட்டிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பின்னர், அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்த அரக்கோணம் கூடுதல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது :
திருத்தணியில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரவு 7.30 மணி அளவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. கதவை திறந்த கிருஷ்ணமூர்த்தியிடம், அடையாளம் தெரியாத 4 பேர் நகைகளை அடகு வைத்துக் கொண்டு பணம் தேவை எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி அவர்களை உள்ளே அனுமதித்துள்ளார். வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் திடீரென கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு அடகுக்கு வந்த நகைகள் எங்கே என கேட்டு மிரட்டியுள்ளனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 400 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர், கிருஷ்ணமூர்த்தியின் கை, கால்களை கட்டி, அவரது வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது.
முதலுதவி சிகிச்சை பெற்ற கிருஷ்ணமூர்த்தி மேல்சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் டவுன் போலீஸார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.