காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஜூன் மாதம் தமிழகத்துக்கு தரவேண்டிய நீரில் 22.934 டிஎம்சி நீர் பற்றாக்குறையாக உள்ளது. அதை உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடகம், மத்திய அரசுகளுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த ஜூலை 30-ம் தேதி கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறக்காததால் விரை வில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மூத்த வழக்கறிஞர்கள் சுப்ரமணியன் பிரசாத், உமாபதி, பரமசிவம் ஆகியோர் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்துக்குரிய காவிரி நீர் பங்கினை கர்நாடகம் திறந்துவிட மறுத்து வரு கிறது. விவசாய சாகுபடி வெகுவாக பாதித்துள்ள தால், இந்த ஆண்டு திறக்க வேண்டிய தண்ணீரில் 50 டிஎம்சி தண்ணீரை உடனடி யாக திறந்துவிட கர்நாடகத் துக்கு உத்தரவிட வேண் டும். வறட்சி காலங்களில் தமிழகத்தின் பங்கை உரிய விதிமுறைப்படி கர்நாடகம் வழங்கும் வகையில் காவிரி நதிநீர் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.