காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் கருணாஸ், பொன் வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு நடிகர் சங்க நிர்வாகிகள், நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறியதாவது:
காவிரி நீர் தொடர்பான போராட் டத்துக்கான முழு உரிமையையும் தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. அனைத்து சங்கங்களுடன் கலந்து பேசி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அதைச் செய்யவேண்டும். கன்னட நடிகர்கள் போராடுவது போன்று நம்மால் போராட முடியாது. ஏனென்றால் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
நாங்கள் எங்களின் உரிமையை ஏன் மறுக்கிறீர்கள் என கேட்டு உணர்வின் வெளிப்பாடாக போராட்டம் பண்ணவிருக்கிறோம். இந்தப் போராட்டம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உணர்வுகளின் வெளிப்பாடாக இல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் திரையுலக சங்கங்களின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.
இவ்வாறு நாசர் கூறினார்.
நடிகர் சங்கச் செயலாளர் விஷால் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறக்க பட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்வரை சில கன்னட நடிகர்கள் தவறாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அதனை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் சரியான முறையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும்.
கண்டனத்துக்குரியது
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே அனைத்து விஷயங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தமிழக முதல்வரின் கொடும்பாவியை எரிப்பது, தவறாக விமர்சனம் பண்ணுவது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது” என்றார்.
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, துணைத் தலைவர் கரு ணாஸ், நடிகர் சங்கப் பதவியில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளி யாகின.
செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் இதுகுறித்து கருணாசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாஸ், “சமூக வலைத் தளத்தில் தேவையின்றி வதந்திகளை பரப்புகிறார்கள். நான் நினைத்ததைத் தான் நடிகர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் நினைத் துள்ளனர். முதல்வர் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்குள் அரசியலே கிடையாது. இது முழுக்க கலைஞர்களுடைய சங்கம்” என்றார்.
ரஜினியின் மனநிலை
கிஷோர், லதா ராவ் நடிப்பில் வைகறை பாலன் இயக்கியிருக்கும் ‘கடிகார மனிதர்கள்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், “அவங்க என்னவெல்லாம் பேசுறாங்க. செய்றாங்க.. உங்களுக்கு மானம், ரோஷம் இருக்கா.. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுறீங்களா..?’என்று நம்ம ஆட்களிடம் கேட்கும்போது நாம் என்ன செய்ய முடியும்? நமக்கே இப்படியிருக்கும் போது கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாரா இருக்கும் ரஜினிக்கு எப்படி இருக்கும். அவருக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடமான பிரச்சினை. அதனால் இந்த காவிரி நீர் பிரச்சினையை அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி” என்றார்.