நீட் தேர்வை நாட்டிலேயே உறுதியாக எதிர்த்து வரும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வரும் 24-ம் தேதி மீண்டும் மத்திய அமைச்சர்களை அதிகாரிகளுடன் சென்று சந்திக்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று 3 வது நாளாக விவாதம் நடந்தது. அதில் திமுக எம்எல்ஏ கோவி.செழியன் பேசுகையில், ''குக்கிராமத்தில் இருந்து படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் திமுக ஆட்சியில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், அனைவரும் ஒரே மாதிரியான கல்வியை பெற சமச்சீர் கல்வித்திட்டமும் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு தொடர்பாக கடந்த ஜனவரி 28ம் தேதி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் தான் வலியுறுத்தினார்'' என்றார்.
இதற்கு பதிலளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
''நீட் தேர்வை நாட்டிலேயே உறுதியாக எதிர்த்து வரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். சட்டப்பேராட்டத்துடன், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று, தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த போதும், அதன் பின் நாங்கள் சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்த போதும் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளோம். அவர்களும் பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். நாங்கள் அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு இடங்களுக்கு தான் விலக்கு கோரி வருகிறோம். தனியார் கல்லூரிகளுக்கோ, நிகர் நிலை பல்கலைக்கழகங்களுக்கோ தேர்வில் இருந்து விலக்கு கோரவில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள 3ஆயிரத்து 700 சிபிஎஸ்இ மாணவர்களுடன், 3 லட்சத்து 90 ஆயிரம் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் போட்டியிட முடியவில்லை. எனவேதான், தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது.
வரும் 24-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. எனவே, உயர்கல்வித்துறை அமைச்சர், சுகாதாரததுறை செயலருடன் நானும் டெல்லி சென்று, அமைச்சரை சந்திக்க உள்ளோம். அரசு நீட் தேர்வு விலக்கு பெறுவதில் உறுதியாக உள்ளது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.